Tuesday, May 12, 2009

ஈழத் தமிழரின் நிலையை விற்று வாக்குப்பெறும் கேடுகெட்ட தமிழக அரசியல் கட்சிகள்


இந்திய நாடாளுமன்றத்துக்கான நான்காம் கட்டத் தேர்தல் தமிழகத்தில் நாளை (13-05-09) நடைபெறவுள்ள நிலையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை விற்று ஈழத்தமிழர் அனுதாப வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் கேடுகெட்ட முயற்சியில் குதித்துள்ளன சில இந்தியத் தமிழ்க் கட்சிகள்.

ஈழத்தமிழர்களை அரசியலாக்கி அதன்மூலம் ஆதாயம் தேடுவதில் தமிழகக் கட்சிகளுக்கு என்ன ஆனந்தம் இருக்கிறதோ தெரியவில்லை. இன்று இரவு 9.30 மணியிருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. வன்னி நிலைமையை மக்கள் ரீவியில் காட்டுகிறார்கள் என்றார் அழைப்பை ஏற்படுத்திய நண்பர்.

சரி என்னதான் காட்டுகிறார்கள் என்று ரீவியைப் போட்டேன். என்ன பரிதாபம் வன்னி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், பாதுகாப்புத் தேடி ஓடும் மக்கள், விமானத் தாக்குதல்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள் ஒழியும் பாடசாலை மாணவர்கள் என வன்னி மக்கள் படும் அவலங்கள் அடங்கிய காட்சிகள் காண்பிக்கப்பட்டன.

ஈழத் தமிழர் விடயத்தில் அனுதாப அலையை ஏற்படுத்துவதற்காக இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பற்றிய இறுவட்டில் பதிவாகியிருந்த காட்சிகளே மக்கள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டன. இந்த இறுவட்டு விநியோகத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதைத் தொடர்ந்தே இக்காட்சிகள் மக்கள் ரீவியில் காண்பிக்கப்பட்டன.

வன்னி மக்கள் படும் கஷ்டங்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்துவதில் எந்தவிதமான தப்பும் இல்லை. ஆனால், தமிழகக் கட்சிகள் ஈழத் தமிழர்களைவைத்து அரசியல் இலாபம் தேடுவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஈழத்தமிழர்களின் அனுதாப வாக்குகளைப் பெற்றுக்கொள்ள மக்கள் தொலைக்காட்சியின் உரிமையாளர் (பா.ம.க. ராமதாஸ்) எடுத்திருக்கும் இறுதிக்கட்சி முயற்சியென்பது தெட்டத்தெளிவாகத் தெரிந்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குப் பொறுக்கமுடியவில்லை. எழுந்து சென்றுவிட்டேன்.

ஈழத்தமிழர் விவகாரம் தமிழகத்தில் பாரியதொரு மக்கள் அலையைத் தோற்றுவித்துள்ளது என்பது நூற்றிற்கு நூறுவீதம் உண்மை. ஆனால் அதனை தமது சொந்த அரசியலுக்குப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிற்கும் தமிழகக் கட்சிகளின் அற்ப ஆசையை என்னால் பெறுக்கமுடியவில்லை. அதனாலேயே நான் தொலைக்காட்சியைப் பார்க்காமல் எழுத்து சென்றுவிட்டேன்.

வன்னியில் தமது உயிர்களை இழந்திருக்கும் உறவுகளை விற்று அரசியல் நடத்த எவ்வாறுதான் இந்தத் தமிழக அரசியல்வாதிகளுக்கு முடிகிறதோ தெரியவில்லை. ஏதோ இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழீழத்தைப் பெற்றுக்கொடுத்துவிடுவதுபோல அவர்களின் பந்தாவேறு.

ஈழத் தமிழர்கள் மீது உண்மையில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு அக்கறையிருந்திருந்தால் எமது மக்களுக்கு இவ்வாறு கையேந்தும் நிலை ஏற்படாதவாறு உரியதருப்பினருக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்திச் சென்றிருக்கவேண்டும். ஆனால் அதனைச் செய்யாமல் நிலைமை மோசமடைந்த பின்னர் இறந்தவர்களின் சடலங்களை ஒளிப்படங்களாகக் காண்பித்து வாக்குவேட்டை நடத்துகின்றனர் கேடுகெட்ட அரசியல் தலைவர்கள். (வடிவேல் சொன்னமாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப றணகளமாக்கிவிட்டார்கள்)

2 comments:

cherankrish said...

நீங்கள் தா.பாண்டியனையும் தொல்.திருமாவளவனையும் பற்றிச்சொல்லவே இல்லையே.. கொஞ்ச நாளாகச் சத்தத்தையே காணவில்லை இவர்களிடமிருந்தது. செல்வி ஜெயலலிதாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு நீட்டிநிமர்ந்து விட்டார்களோ..

கனககோபி said...

நூற்றுக்கு நூறு வீதம் ஏற்றுக் கொள்கிறேன்.
இவர்களை நம்பி தீக்குளிக்கும் அப்பாவி இளைஞர்களையும் நினைத்து வேதனைப் படுகிறேன்.