Saturday, May 16, 2009

தமிழக மக்கள் சென்டிமென்டல் இடியட்ஸா?


தமிழகத்திலுள்ள மக்கள் ‘சென்டிமென்டல் இடியட்ஸ்’ எனப் பலர் திட்டுவது எனது காதுகளுக்கும் கேட்டுள்ளது. ஆனாலும், தற்பொழுது நடந்து முடிந்திருக்கும் இந்திய லோக்சபாத் தேர்தல் முடிவுகள் அவர்கள் அவ்வாறானவர்கள் இல்லையென்பதை ஓரளவு நிரூபித்துள்ளது.

தமிழகத்திலுள்ள மக்கள் விரைவில் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்ற பொதுவான கருத்து நிலவுவது உண்மை. இதனால்தான் அவர்களை சிலர் ‘சென்டிமென்டல் இடியட்ஸ்’ எனத் திட்டுவார்கள். ஆனால் அவர்களை இனிமேலும் அப்படித் திட்டுவது பொருந்தாது போலத் தெரிகிறது. ஏனெனில் இந்திய லோக்சபாத் தேர்தலில் தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாகக் கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டபோதும், இப்பிரசாரங்கள் அவ்வளவாக எடுபடவில்லையென்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

குறிப்பாக தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணுவோம் என்ற தொனிப்பொருளில் பிரசாரங்களை நடத்தின. செல்வி ஜெயலலிதா ஒருபடி மேலே சென்று அ.தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தால் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனிஈழத்தைப் பெற்றுக்கொடுப்போம் என (மொக்குத்தனமாக!) அறிக்கைவிட்டார்.

அதேநேரம், தனது தொலைக்காட்சியில் ஈழத்தமிழர்கள் படும் அவலங்களை விற்று வாக்குகளைக் கோரிய மருத்துவர் ராமதாசினதும், ஈழத் தமிழர்களின் பிரச்சாரப் பீரங்கி என நினைக்கும் அளவுக்கு சவுட் கொடுத்துவந்த வைக்கோவினதும் ஈழத்தமிழர் ஆதரவுப் பிரசாரங்கள் இம்முறை தேர்தலில் அதிக ஆதிக்கம் செலுத்தும் எனக் கருதப்பட்டது. ஆனால் ராமதாசும், வைகோவும் மண் கவ்வியதைத் தவிர வேறு எந்தவிதமான புரட்சியும் தமிழகத்தில் ஏற்படவில்லை. பா.ம.க.வை நம்பி அது கேட்ட அனைத்துத் தொகுதிகளை வழங்கிய ஜெயலலிதாவின் அனுமானமும் பிழைத்துவிட்டது.

ஈழத்தமிழர் விவகாரம்; தமிழக மக்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பலையைத் தோற்றுவித்தது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. ஆனாலும் ஈழத் தமிழர் தொடர்பான சென்டிமென்ட் பிரசாரத்துக்கு தமிழக மக்கள் அவ்வளவாக ஈர்க்கப்படவில்லையென்பதையே தேர்தல் முடிவுகள் காட்டிநிற்கின்றன.

இது இவ்வாறிருந்தாலும் கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தலில் எந்த ஆசனங்களையும் பெற்றிராத அ.தி.மு.க. கூட்டணி இம்முறை 16 ஆசனங்களைப் பெற்றிருப்பதானது, ஈழத் தமிழர் ஆதரவுப் பிரசாரம் என்பதால் தான் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஏலவே, தமிழக மக்களை சென்டிமென்டல் இடியட்ஸ் எனத் திட்டுவது இனியும் பொருந்தாது தானே!

(பாவம், இந்திய இராணுவத்தை அனுப்பித் தனிஈழம் பெற்றுக்கொடுப்பேன் என்ற ஜெயலலிதாவின் மொக்குத்தனமான கூற்றை நம்பி அவருக்கு வாக்களிக்குமாறு கூறிய இயக்குனர் சாமான்… சொறி சொறி சீமான் தனது முகத்தை எங்கேகொண்டே வைக்கப்போகிறாரோ தெரியவில்லை)

0 comments: