Wednesday, May 13, 2009

இறந்தவர்களுக்கு மனித உரிமை இல்லையா?

மனித உரிமை மனித உரிமை என்ற பதத்தை நாம் பெரும்பாலும் ஊடகங்களின் ஊடாகக் கேட்டிருப்போம். மனித உரிமை என்றால் மனிதன் ஒரு மனிதனாக வாழ்வதற்குக் காணப்படும் அனைத்து உரிமைகளும் என அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

அவ்வாறாயின் உயிரிழந்தவர்களுக்கு மனித உரிமை இல்லையா? இந்தக் கேள்வியை நாமே நமக்குள் கேட்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. குறிப்பாகத் தமிழர்களாகிய நாம் சிந்திக்கவேண்டிய தருணத்திலுள்ளோம்.

ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் தற்பொழுது இலங்கையிலிருக்கும் சூழ்நிலையில் எந்தவொரு தமிழ் இணையப் பக்கத்திற்குள் நுழைந்தாலும் உடல்சிதறிப் பலியானவர்களின் படங்களைப் பார்க்காமல் இருக்கமுடிவதில்லை. எந்த இணையத்திற்குச் சென்றாலும் உடல்சிதறிப் பலியான சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என வயது வித்தியாசமின்றிப் புகைப்படங்கள் தரவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

வன்னியில் மக்கள் படும் இன்னல்களைக் காண்பிக்கிறோம் 'பேர்வழியென்று 'கண்கொண்டு பார்க்கமுடியாத மிகவும் மோசமான (மோசமான நிலையில் உடல்கள் சிதறியிருக்கும்) புகைப்படங்களாக அவை இருக்கும். அவ்வாறான புகைப்படங்களைப் பார்க்கும்போது முதலில் அனுதாபம் ஏற்பட்டாலும் கூடவே அருவருப்புத் தான் தோன்றும். வெறியோ அல்லது பழிவாங்கும் எண்ணமோ ஏற்படாது.

ஏன் இறந்தவர்களுக்கென மனித உரிமை இல்லையா?இறந்த பெண்களுக்கு மானம் இல்லையா. இறந்த பெண்கள் எந்தக் கோலத்திலிருந்தாலும் அவற்றைப் புகைப்படம் பிடித்துப் போடுவதா? ஏன் இறந்த பின்னர்; தம்மை இந்தக் கோலங்களில் புகைப்படம் எடுத்துப் போடுங்கள் என்று உயிரிழந்தவர்கள் எம்மிடம் கூறிச் சென்றார்களா?

ஏன் இந்த வேண்டாதவேலை. அண்மையில் தமிழ் இணையத்தளமொன்றில் காணொளிக் காட்சியொன்றைப் பார்தேன், கால்கள் மற்றும் கைகளை இழந்தவர்களைச் சிலர் உழவு இயந்திரமொன்றில் ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனைச் சுற்றிச் சுற்றி மூவர் ஒளிப்பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி அவர்;களைக் காப்பாற்றுவதைவிட வீடியோ எடுப்பது முக்கியமாகிவிட்டதா எமக்கு? உறவுகளை இழந்த கவலையில் கண்ணீர் வடிப்பவர்களை மீண்டும் ஒருமுறை அழுங்கள் எனக் கூறி வீடியோ எடுத்த சம்பவங்கள் நடந்ததாகவும் எனது செவிகளுக்கு சில தகவல்கள் எட்டுப்பட்டன.

என்ன கொடும சரணவன் சார் இது…………

1 comments:

கனககோபி said...

ம்...
தமிழர்கள் சார்பாக காயப்பட்ட, இடம்பெயர்ந்த மக்களுக்கு கிடைத்த உதவிகள் சொற்பமாமே?
சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் எம்மை விட அதிகமாக உதவி செய்கிறார்களே?
நாம் என்ன செய்கிறோம்? வெறுமெனே 'உச்சுக்' கொட்டிக் கொண்டிருக்கிறோம்.