Sunday, May 3, 2009

தமிழரின் நிலைக்கு யார் காரணம்?


வன்னிப் பெரும்நிலப்பரப்பிலிருந்து 180,000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பரதேசிகளாக இடம்பெயர்ந்து, ஒருவேளை சோற்றுக்கு மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்து நிற்பதற்கு யார் காரணம் என்ற கேள்வி சில வாரங்களாக எனது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.

நாங்களும் (தமிழர்கள்) இந்த நிலைக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று நான் கருதுகின்றேன். ஏனெனில், வெறுமனே விடுதலைப் புலிகள் மீதோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீதோ குற்றஞ்சாட்டுவது பொருத்தமாக அமையாது என்பது எனது உறுதியான கருத்து.

ஆரம்பம் எங்கே?

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து தமிழர்களுக்குப் பிடித்தது சனியன். விடுதலைப் புலிகள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இம்முறை வித்தியாசமாக ஐம்பூதங்களில் ஒன்றான நீரை மூடி அதிலிருந்து தமது மோதல்களை ஆரம்பித்தனர். (எவ்வளவு நாள்தான் சும்மா இருப்பது என நினைத்தார்களோ என்னவோ)

எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம், இதுதான் சந்தர்ப்பம் எனக் கருதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது. முழுமூச்சாகத் தனது படைபலம் முழுவதையும் இறக்கி தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது அரசாங்கம். இதற்கு வெளிநாடுகளின் குறிப்பாக ஆசிய நாடுகளின் முழு அளவிலான ஆதரவுவேறு. மக்கள் பற்றியோ எதைப்பற்றியோ இரண்டு தரப்பும் கவலைப்படவில்லை.

மாவிலாற்றில் பின்வாங்கத் தொடங்கிய விடுதலைப் புலிகள், கிழக்கு மாகாணத்தையும், மன்னாரையும் முழுமையாகவிழந்தனர். வெளிநாட்டு சக்திகளின் பூரண ஆசீர்வாதத்துடன் முழு அளவிலான மோதல்களை நடத்;திய அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளின் கோட்டை எனக் கூறப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்றினர். விடுதலைப் புலிகள் நினைத்துப் பாத்திராதபடி கிளிநொச்சி, முல்லைத்தீவு முழுவதையும் கைப்பற்றி புதுமாத்தளன் எனும் சிறு பரப்புக்குள் விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

மக்களின் நிலைமை

இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களால் 180,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதுடன், மேலும் ஒன்றரை இலட்சம் பேர் இடம்பெயரவுள்ளனர். இந்த நிலைக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும்தான் காரணம் எனக் கூறிவிடமுடியாது. ஏனென்றால், விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியபோது அதனைப் பெரும்பாலான தமிழர்கள் கொண்டாடினார்கள்.

இதில் ‘அண்ண வரவிட்டு அடிப்பார்’, ‘எங்கட பெடியள் விடமாட்டங்கள்’ என்ற நம்பிக்கை வார்த்தைகள் வேறு. வன்னியிலிருந்து புறப்பட்டு கொழும்பில் வந்து விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்திச் சென்றன என்ற செய்தியைச் சொல்வதில் பெரும்பாலான தமிழர்கள் ஆனந்தமடைந்தனர்.

இவ்வாறு எப்பொழுதுமே விடுதலைப் புலிகளைப் பாராட்டிய நாம், விடுதலைப் புலிகள் தோல்வியடைவார்கள், அவர்களுக்குத் தோல்வி ஏற்படுமா என்பதை ஒரு கணமேதும் சிந்திக்கத் தவறிவிட்டோம். சரி தனிநாடு கோரிப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அடுத்த கட்டம் என்ன? மாற்றுவழி என்ன? என்பதை யாராவது சிந்தித்தோமா? அல்லது விடுதலைப் புலிகளை நம்பிச் சென்ற வன்னி மக்களின் நிலைமைகள் பற்றித்தான் சிந்தித்தோமா?

இல்லை, அவை எதைப்பற்றியும் நாம் சிந்திக்கத் தவறிவிட்டோம். அதேநேரம், மாற்றுக் கருத்துக்களை விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதும் உண்மை. ஆனாலும், அவர்களுக்குக் கூறவேண்டிய முறையில் கூறி எமது மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என நான் கருதுகிறேன்.

1 comment:

cherankrish said...

தமிழர்களின் நிலைமைக்கு தமிழர்களே முழுமுதல் காரணம்.கண்ணிருந்தும் குருடர்களாகவும் காதிருந்தும் செவிடர்களாகவும் இருப்பவர்களை என்னவென்று சொல்வது?

மக்களை ஆட்டு மந்தைகளாக மாற்றுவதில் வெற்றி கண்டுவிட்டோமே பிறகென்ன?

தலைமைத்துவங்கள் விடுதலைப்புலிகளுடன் ஓயப்போவதில்லை.இனி வெளிநாடுகளில் வாழும் மற்றய இயக்கங்களின் தலைவர்கள் நாடுதிரும்பி மக்களுக்கான "வளிகாட்டல்களில"; ஈடுபடும்நாள் வெகுதூரத்தில் இல்லை