Wednesday, November 24, 2010

ஒளி இழக்கா… விழிகள்

100 முட்டைக் கோழிகள்> 550 ஒரு நாள் கோழிக் குஞ்சுகள்> 350 குஞ்சுகள்> 75 இறைச்சிக் கோழிகள்…

இவற்றையெல்லாம் ஒருவரே ஒருவரே வளர்க்கிறார் என்றால் நம்புவீர்களா?

பெரிய கோழிப்பண்ணை சாத்தியம்தான். இரண்டு கண்களும் தெரியாத ஒருவர் இவ்வளவும் செய்கிறார் என்றால் நம்புவீர்களா…?

யாழ்ப்பாணம் 2ஆம்; குறுக்குத் தெருவில் வசித்துவரும் கனகசபை என்கின்ற அசாதாரண மனிதரின் வீட்டுக்குப் போகுமுன் எனக்கும் நம்பமுடியாமல்தான் இருந்தது.

‘கன(க்)க’சபை

“அண்ணாக்கள்… அக்காக்கள்… கண்பார்வையிழந்தவர்களுக்கு உதவிசெய்வதற்காக ஒரு பத்து ரூபா அதிர்ஷ்டலாபச் சீட்டை வாங்கி உதவுங்கோ…”

போன நல்லூர் திருவிழாவில் இவ்வாறு கூவியழைத்துக்கொண்டிருந்த கண்பார்வை இழந்த சிலரை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

அவர்களுள் ஒருவரான கனகசபையிடம் டிக்கட்டை வாங்கியபடியே பேச்சுக்கொடுத்தபோதுதான், இவருக்குள் ‘கனக்க’ விசயங்கள் ஒழிந்திருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

அடுத்த நாளே ‘டான்’ என்று அவருடைய வீட்டுக்கு விசிட் அடித்தோம்.
அழகிய கூடு

யாழ்ப்பாணப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையிலான பழையதொரு வீடு. வாசலில் குருவிக்கூடு.

வீட்டின் பின்பகுதியில்… ஐந்து பெரிய கோழிக் கூடுகள்.

அந்த வீடே அழகியதொரு கூடுபோல்தான் இருந்தது.

“காலையில் கோழிகளுடன்தான் என்ரை நாள் ஆரம்பிக்கும்” என்று சொன்னபடி கோழிக்கூடு ஒன்றுக்குள்ளிருந்து வெளியே வந்த கானகச்பை
> உற்சாகத்துடன் ஒவ்வொரு கோழிக் கூடாக எமக்குக் காட்டத் தொடங்கினார்.

கண்பார்வையில்லாதவரால் எப்படி… என்று நாம் நினைப்பதற்குள்
> “சத்தத்தை வைத்தே குஞ்சுகளின் கூடுகளையும்> ஏனைய கூடுகளையும் அடையாளம் கண்டுகொண்டுவிடுவேன்” என்றார் புன்சிரிப்புடன்.

பாதங்களால் அடிகளை எண்ணி வைத்தே தாம் சரியாக ஒவ்வொரு இடத்துக்கும் செல்வதாகச் சொல்லப்படுவது தவறு என்று கூறும் கனகசபை
> கோழிகளுக்கு நோய் ஏற்பட்டாலும் அதனைத் தன்னால் கண்டுபிடித்துவிட முடியும் என்கிறார்.

“கோழிகளின் சத்தத்தை வைத்தே அவற்றுக்கு வருத்தம்; வந்துள்ளதா என்பதை அறிந்துகொண்டுவிடுவேன். மனைவியை அழைத்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று கேட்டுத் தெரிந்துகொள்வேன்” என்கிறார் அவர் உறுதியுடன்.

25 வருட அனுபவ முதிர்ச்சி அவருடைய பேச்சில் தெளிவாகத் தொனித்தது.

ஆம், க.பொ.த. சாதாரணதரம் படித்துக்கொண்டிருக்கும்போது தனது இரண்டு கண் பார்வைகளையும் இழந்த கனகசபை, 22வது வயது (இப்போது 47வயது) முதல் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகச் சொல்கிறார்.

2008ஆம் ஆண்டு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் சிறந்த பண்ணையாளராக இவர் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

வங்கிக் கடன் மூலமே கோழி வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறும் கனகசபை
> இப்போதும்கூட வங்கிக் கடன்களைக் கொண்டே கோழி வளர்ப்பில் முன்னேறி வருவதாக நம்பிக்கையுடன் கூறுகிறார்.

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் தமது சங்கத்திலுள்ள பலருக்கு வங்கிக் கடன் வழங்கியிருப்பதாகவும் அவர்; மகிழ்கிறார்.

கரம்பிடித்த கதை

கனகசபையுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே, கையில் குளிர்பானத்துடன் வந்தவர் அவருடைய மனைவி சிவநந்தினி (40).

தனது அன்றாட வாழ்க்கையில் 50 சதவீதம்; மனைவியின் பங்களிப்புத்தான் என்று பெருமையுடன் அவரை எமக்கு அறிமுகப்படுத்தினார் கனகசபை.

‘இருவரும் இணைந்த கதையைக் கூறுங்களேன்…” என்றேன் விடாமல்.

“ஐ.சி.ஆர்.சி.யில் டைப்பிங் வகுப்பிற்குச் செல்லும்;போதே இவரை நான் சந்தித்தேன். நாங்கள் லவ் பண்ணித்தான் கல்யாணம் செய்தனாங்கள். எனது வீட்டில் நான் ஒரேயொரு பெண் பிள்ளையென்பதால் எதிர்ப்பு இருந்தது” என்று சொன்ன அந்தப் புண்ணியவதி.

“அப்பாவும், தம்பியும் இதுவரை எங்களுடன் கதைப்பதில்லை” என்றார் வேதனையுடன்.

ஆரம்பத்தில் தேர்தல்கள் திணைக்களத்தில் பணியாற்றியபோதும்
> குழந்தைகள் பிறந்த பின்னர் வேலையிலிருந்து விலவிட்டதாகக்கூறிய அவர்> கனகசபை செல்லவேண்டிய இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் தானே அவரை அழைத்துச் செல்வதாகவும் கூறுகிறார். (வாழ்க்கைத்துணை என்பதன் முழு அர்த்தம் இதுதான்போலும்)

துவாரகன்(10)
> அபிராமி (8) ஆரூரன் (5) என்று மூன்று பிள்ளைச் செல்வங்களின் படிப்பையும் தான் கவனித்துக் கொள்கின்றபோதும்> காலையில் பிள்ளைப் பாடசாலைக்குத் தயார்ப்படுத்தி அனுப்புவதென்னவோ கனகசபையின் பொறுப்புத்தான் என்று எமது பிரமிப்பை மேலும்; அதிகரித்தார் அவர்.

பிறர்க்கென வாழ்தல்

வீட்டுப் பொறுப்புக்கள் போக
> கண்பார்வையற்றோர் சங்கத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவரும் கனகசபை> பகல் பொழுது பெரும்பாலும் சங்க வேலைகளிலேயே கழிவதாகக் கூறுகிறார்.

தனது வாழ்வில் திடீரென இருள் சூழ்ந்தும்;கூட சுதாரித்துக்கொண்டு மீண்டெழுந்J> தனக்கென மட்டும் வாழாது
> தன்னைப்போன்ற பிறர்க்காகவும் பாடுபடும் இவரது தன்னம்பிக்கை> தற்றுணிவு, பெருந்தன்மை> மனிதநேயம் என்பவற்றை வியந்தபடி அவர்களிடம் விடைபெற்றோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘சிகரம்; தொடு’ மாதாந்த சஞ்சிகை (ஒக்டோபர்)க்காக எழுதியது

Monday, August 24, 2009

மொக்கை = மொட்டை ?


நாம் கதைக்கும் போது அடிக்கடி மொக்கை மொக்கை என்ற பதத்தைப் பாவிப்பது வழமையாகிவிட்டது. ஆனால் இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு தினத்தன்று இரவு என்னுடன் ஸ்கைப்பிய உதயதாரகைக்கு வலைப்பதிவர் சந்திப்பில் நடந்த விடயங்களை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தோன். அப்போது மொக்கை என்ற பதத்திற்குப் பதிலாகப் ‘பம்பல்’ என்ற பதத்தைப் பயன்படுத்துவோம் என வலைப்பதிவர் சந்திப்பில் கதைத்ததைப் பற்றி அவரிடம் கூறினேன்.

“மொக்கை என்றால் என்ன தெரியுமா” என உதய தாரகை என்னிடம் கேட்டார். எனக்குத் தெரியாது நீங்களே பதிலைக் கூறிவிடுங்கள் என்று பதில்சொல்லும் பொறுப்பையும் அவரிடமே நான் விட்டுவிட்டேன்.

மொக்கை என்றால் மொட்டை என இந்திய நண்பர் ஒருவர் கூறியதாக உதயதாரகை பதிலளித்தார்.

கூர்மையற்ற பொருள்களையே நாங்கள் மொட்டை என்று கூறுவேம். நீங்கள் என்ன மொக்கை என்று கூறுகிறீர்கள் என உதயதாரகை அவரிடம் கேட்டுள்ளார். உதாரணமாக கூர்மையற்ற கத்தியை மொக்கை என்றே கூறுவோம் என்றும், மொக்கைக் கத்தியென்றால் அதனால் எந்தப் பயனும் இல்லையென்று பொருள்படும் என்றும் அந்த இந்திய நண்பர் உதயதாரகைக்குக் கூறியுள்ளார்.

அப்படியாயின் வழுக்கைத் தலையுடைய ஒருவரை எவ்வாறு கூறுவீர்கள் என உதயதாரகை தனது சந்தேகத்தை இந்திய நண்பரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
“அதனை மொட்டை என்றுதான் கூறுவோம். அதற்கும் மொக்கை என்று கூறினால் மட்டைக்குள் ஒன்றும் இல்லாதவர் என்று அர்த்தப்பட்டுப்போய்விடும். அதனால் வழுக்கைத் தலையை மொக்கை என்று கூறுவதில்லை” என்றும் இந்திய நண்பர் அருமையான விளக்கம் கொடுத்தாராம் உதயதாரகைக்கு.

அப்படியொன்றால் மொக்கை ஜோக் என்றால் ஜோக்கே இல்லை என்றா அர்த்தம்.

மொக்கை என்ற பதத்திற்கான அர்த்தத்தை அறிந்துகொள்ள நான் வெது ஆவலாக உள்ளேன். உதயதாரகை போன்று வேறு எவருக்கும் மொக்கைக்கான அர்த்தம் தெரிந்தால் தெரியத்தருகிறீர்களா?

Tuesday, June 16, 2009

தீர்வை மிக அண்மித்திருந்தோம்: சொல்ஹெய்ம்


இலங்கை இனப்பிரச்சினையில் சமாதானத்தை மிகவும் அண்மித்துக்கொண்டிருந்தபோதே விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் மோதல்கள் ஆரம்பித்ததாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

“சமஷ்டி அடிப்படையில் தீர்வொன்றைக் காண்பதற்கு விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் இணங்கவைக்க நாம் தவறிவிட்டோம். இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சமஷ்டிமுறை பின்பற்றப்படுகிறது” என்று குறிப்பிட்ட எரிக்சொல்ஹெய்ம்,
“ஆரம்பத்தில் சமஷ்டிமுறையில் தீர்வுகாண இணக்கம் காணப்பட்டது. இலங்கையிலுள்ள அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால், பின்னர் அதனை ஏற்றுக்கொள்ளப் பிரபாகரனோ அல்லது இலங்கை அரசாங்கமோ தயாராகவிருக்கவில்லை” என பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

குறைந்தது 10 தடவைகள் பிரபாகரனைத் தான் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட எரிக் சொல்ஹெய்ம், போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தாக்குதல்கள் நிறுத்தப்படும் எனப் பிரபாகரன் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்பட்டபோதும், பின்னர் அவரால் அதனைக் கடைப்பிடிக்க முடியாது போனதாகக் கூறினார்.

மோதல்கள் இறுதிக்கட்டத்திலிருந்தபோது ஆயுதங்களைக் கைவிட்டு வெள்ளைக் கொடிகளுடன் அரசாங்கப் படைகளிடம் சரணடைவதே உயிர் தப்புவதற்கான ஒரேயொரு வழியெனத் தாம் விடுதலைப் புலிகளுக்குக் கூறியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தற்பொழுது மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய காலம் வந்துள்ளது. அனைத்து சமூகங்களினதும் எதிர்காலம் பற்றிச் சிந்தித்துத் தீர்வொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைக்கவேண்டும். தமிழ் மக்கள் தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி உதவிக்கரம் நீட்டவேண்டும்” என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

அதேநேரம், இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும், மனிதநேய அமைப்புக்களும் தடையின்றி சென்று வருவதற்கான அனுமதி குறித்து இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து செயற்பட்டுவருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தனிநாடு கோரிப் போராடிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பு 2001ஆம் ஆண்டு முதன் முறையாக ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பும் போர்நிறுத்தமொன்றுக்குச் செல்ல இணங்கியதுடன், 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி நோர்வேயின் அனுசரணையுடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் போர்நிறுத்த உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டனர்.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கிலிருந்த மக்கள் சுமுகமான வாழ்க்கையை அமைக்கத் தொடங்கினர். வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் பகுதிகள், அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகள் என வரைறுக்கப்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் செல்வது தடுக்கப்பட்ட அதேநேரம், விடுதலைப் புலிகளும் ஏனைய பகுதிகளுக்குச் சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட இணக்கம் காணப்பட்டது.

போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி சாதாரண நிலையொன்று ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சமாதானத்துக்கான காலம் கனிந்தது. போர்நிறுத்த உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் 2002ஆம் ஆண்டே ஆரம்பமாகின.

முதல்ச் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தாய்லாந்தில் நடைபெற்றன. 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நோர்வேயில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் சமஷ்டியை அடிப்படையாகக் கொண்ட உள்ளக சுயநிர்ணய உரிமையொன்றுக்கு இரண்டு தரப்பும் இணங்கியிருந்தன. அதன் பின்னர் நடைபெற்ற ஏனைய மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் உள்ளகசுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்டே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

எனினும், ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஒருதலைப் பட்சமாக விலகிக்கொண்டனர். அதன் பின்னர் தென்பகுதி அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார்.

அவரின் ஆட்சிக் காலத்திலும் நோர்வேயின் அனுசரணையுடன் 2006ஆம் ஆண்டு இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றி அதிகளவில் பேசப்படாதநிலையில், விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்தே 2006ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் முடிவுக்கு வந்து மோதல்கள் ஆரம்பித்தன.

courtesy:- www.lankaewatch.com

Wednesday, June 10, 2009

ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இந்தியாவின் யுத்தம் ஆரம்பித்தது: மேனன்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்தபின்னர் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா ஆரம்பித்தது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன்.

இந்தியாவின் யுத்தத்தைத் தான் முன்னெடுப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கும் கருத்தானது சரியெனக் குறிப்பிட்டிருக்கும் மேனன், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்துவந்ததாகக் கூறினார். ஏனெனில், இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் இந்தியா பாதுகாப்பான இடமாக இருக்கமுடியாது. பயங்கரவாதம் எப்போதும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்” என இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கை பத்திரிகையாசிரியர்களிடம் கருத்துத் தெரிவித்தபோது மேனன் சுட்டிக்காட்டினார்.

சிக்கலான முறைகள் குறித்து இந்தியாவும், இலங்கையும் நன்கு பாடம் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இந்தியாவின் அயல்நாடுகள் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலையிலிருக்கவேண்டுமென்பதால் இலங்கையின் பொருளாதார நிலையும் ஸ்திரமானதாக இருக்கவேண்டுமென்பதில் கவனம் செலுத்தியிருப்பதாகக் கூறினார்.

இலங்கைக்கான புனரமைப்பு நடவடிக்கைகளை இந்தியாவோ அல்லது நோர்வேயோ வழிநடத்தக்கூடாதெனவும், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக புனரமைப்பு நடவடிக்கைகளை இலங்கையே முன்னெடுக்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.

“இவற்றின் அடிப்படையிலேயே தான் திட்டமிட்டுச் செயற்பட்டதாகக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது என்னைக் கவர்ந்துள்ளது. இலங்கைக்கு எது பொருத்தம் என ஜனாதிபதி தீர்மானித்த விடயங்கள் அனைத்துக்கும் இந்தியா உதவியாகவிருந்தது” என்றார் சிவ்சங்கர் மேனன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் சந்திக்கவில்லை

இதேவேளை, தற்பொழுது இந்தியாவில் தங்கியிருந்து அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு இன்னமும் அனுமதி பெறவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

புதுடில்லியிலிருக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அங்கிருக்கும் அரசியல் தலைவர்களை உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமற்ற வகையிலும் சந்தித்து வந்தாலும் பிரதமரைச் சந்திப்பதற்கு இன்னமும் அவர்கள் அனுமதியெடுக்கவில்லையென்றார் அவர்.

நன்றி :- லங்கா ஈவொட்ஜ்.கொம்

Monday, May 4, 2009

சுட்டுப்பழகுநின்றால் சுடு: இருந்தால் சுடு:
ஓட ஓடச்சுடு: ஓடாமலே சுடு.
கடத்திக் கொண்டு போய் சுடு
கடத்தாமலே சுடு கூப்பிட்டுச் சுடு: கூப்பிடாமலே சுடு:
கதவைத் தட்டித் திறக்கச் சுடு

கதவை உடைத்துப் போய்ச் சுடு
கண்டபடி சுடு: நிண்டபடி சுடு
கண்டவர் நிண்டவர் எல்லாரையும் சுடு

எச்சரித்துச் சுடு: எச்சரியாமல் சுடு

நச்சரித்தால் சுடு: நமைச்சல் எடுத்தால் சுடு


சுட்டுப் பழகு: சுடுதல் ஒரு பயற்சி.

அதிலும் அப்பாவிகளைச் சுடுதல்!


தந்தைக்குமுன் தனயரைச் சுடு
முன்பள்ளிப் பிள்ளை முன் தந்தையைச் சுடு
குணவனின் முன் மனைவியைச் சுடு
சைக்கிளில் போகையில் சுடு
ஓட்டோவில் போகையில் சுடு
சைக்கிளில் போய்ச் சுடு
ஓட்டோவில் போய்ச் சுடு
காவரணுக்கு இடையால போய்ச் சுடு
காவலரண் காவலிருக்கச் சுடு:

சுட்டுக்கொண்டேயிருக்கிறது
துப்பாக்கிக்கு அழகு, சுடு.
துப்பாக்கி ஏந்தியிருந்தால் மட்டுமா உனக்கழகு
சுடுதலே அழகு: சுடு

-விடுதலை முகம்-

Sunday, May 3, 2009

தமிழரின் நிலைக்கு யார் காரணம்?


வன்னிப் பெரும்நிலப்பரப்பிலிருந்து 180,000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பரதேசிகளாக இடம்பெயர்ந்து, ஒருவேளை சோற்றுக்கு மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்து நிற்பதற்கு யார் காரணம் என்ற கேள்வி சில வாரங்களாக எனது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.

நாங்களும் (தமிழர்கள்) இந்த நிலைக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று நான் கருதுகின்றேன். ஏனெனில், வெறுமனே விடுதலைப் புலிகள் மீதோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீதோ குற்றஞ்சாட்டுவது பொருத்தமாக அமையாது என்பது எனது உறுதியான கருத்து.

ஆரம்பம் எங்கே?

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து தமிழர்களுக்குப் பிடித்தது சனியன். விடுதலைப் புலிகள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இம்முறை வித்தியாசமாக ஐம்பூதங்களில் ஒன்றான நீரை மூடி அதிலிருந்து தமது மோதல்களை ஆரம்பித்தனர். (எவ்வளவு நாள்தான் சும்மா இருப்பது என நினைத்தார்களோ என்னவோ)

எங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம், இதுதான் சந்தர்ப்பம் எனக் கருதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது. முழுமூச்சாகத் தனது படைபலம் முழுவதையும் இறக்கி தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது அரசாங்கம். இதற்கு வெளிநாடுகளின் குறிப்பாக ஆசிய நாடுகளின் முழு அளவிலான ஆதரவுவேறு. மக்கள் பற்றியோ எதைப்பற்றியோ இரண்டு தரப்பும் கவலைப்படவில்லை.

மாவிலாற்றில் பின்வாங்கத் தொடங்கிய விடுதலைப் புலிகள், கிழக்கு மாகாணத்தையும், மன்னாரையும் முழுமையாகவிழந்தனர். வெளிநாட்டு சக்திகளின் பூரண ஆசீர்வாதத்துடன் முழு அளவிலான மோதல்களை நடத்;திய அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளின் கோட்டை எனக் கூறப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்றினர். விடுதலைப் புலிகள் நினைத்துப் பாத்திராதபடி கிளிநொச்சி, முல்லைத்தீவு முழுவதையும் கைப்பற்றி புதுமாத்தளன் எனும் சிறு பரப்புக்குள் விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

மக்களின் நிலைமை

இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களால் 180,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதுடன், மேலும் ஒன்றரை இலட்சம் பேர் இடம்பெயரவுள்ளனர். இந்த நிலைக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும்தான் காரணம் எனக் கூறிவிடமுடியாது. ஏனென்றால், விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியபோது அதனைப் பெரும்பாலான தமிழர்கள் கொண்டாடினார்கள்.

இதில் ‘அண்ண வரவிட்டு அடிப்பார்’, ‘எங்கட பெடியள் விடமாட்டங்கள்’ என்ற நம்பிக்கை வார்த்தைகள் வேறு. வன்னியிலிருந்து புறப்பட்டு கொழும்பில் வந்து விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்திச் சென்றன என்ற செய்தியைச் சொல்வதில் பெரும்பாலான தமிழர்கள் ஆனந்தமடைந்தனர்.

இவ்வாறு எப்பொழுதுமே விடுதலைப் புலிகளைப் பாராட்டிய நாம், விடுதலைப் புலிகள் தோல்வியடைவார்கள், அவர்களுக்குத் தோல்வி ஏற்படுமா என்பதை ஒரு கணமேதும் சிந்திக்கத் தவறிவிட்டோம். சரி தனிநாடு கோரிப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அடுத்த கட்டம் என்ன? மாற்றுவழி என்ன? என்பதை யாராவது சிந்தித்தோமா? அல்லது விடுதலைப் புலிகளை நம்பிச் சென்ற வன்னி மக்களின் நிலைமைகள் பற்றித்தான் சிந்தித்தோமா?

இல்லை, அவை எதைப்பற்றியும் நாம் சிந்திக்கத் தவறிவிட்டோம். அதேநேரம், மாற்றுக் கருத்துக்களை விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதும் உண்மை. ஆனாலும், அவர்களுக்குக் கூறவேண்டிய முறையில் கூறி எமது மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என நான் கருதுகிறேன்.