Wednesday, June 10, 2009

ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இந்தியாவின் யுத்தம் ஆரம்பித்தது: மேனன்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலை செய்தபின்னர் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா ஆரம்பித்தது என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன்.

இந்தியாவின் யுத்தத்தைத் தான் முன்னெடுப்பதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கும் கருத்தானது சரியெனக் குறிப்பிட்டிருக்கும் மேனன், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தொடர்ந்துவந்ததாகக் கூறினார். ஏனெனில், இலங்கையின் பாதுகாப்பு இந்தியாவுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தால் இந்தியா பாதுகாப்பான இடமாக இருக்கமுடியாது. பயங்கரவாதம் எப்போதும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்” என இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்கும் இலங்கை பத்திரிகையாசிரியர்களிடம் கருத்துத் தெரிவித்தபோது மேனன் சுட்டிக்காட்டினார்.

சிக்கலான முறைகள் குறித்து இந்தியாவும், இலங்கையும் நன்கு பாடம் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இந்தியாவின் அயல்நாடுகள் பொருளாதார ரீதியில் ஸ்திரமான நிலையிலிருக்கவேண்டுமென்பதால் இலங்கையின் பொருளாதார நிலையும் ஸ்திரமானதாக இருக்கவேண்டுமென்பதில் கவனம் செலுத்தியிருப்பதாகக் கூறினார்.

இலங்கைக்கான புனரமைப்பு நடவடிக்கைகளை இந்தியாவோ அல்லது நோர்வேயோ வழிநடத்தக்கூடாதெனவும், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக புனரமைப்பு நடவடிக்கைகளை இலங்கையே முன்னெடுக்கவேண்டுமெனவும் அவர் கூறினார்.

“இவற்றின் அடிப்படையிலேயே தான் திட்டமிட்டுச் செயற்பட்டதாகக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது என்னைக் கவர்ந்துள்ளது. இலங்கைக்கு எது பொருத்தம் என ஜனாதிபதி தீர்மானித்த விடயங்கள் அனைத்துக்கும் இந்தியா உதவியாகவிருந்தது” என்றார் சிவ்சங்கர் மேனன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் சந்திக்கவில்லை

இதேவேளை, தற்பொழுது இந்தியாவில் தங்கியிருந்து அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்கு இன்னமும் அனுமதி பெறவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

புதுடில்லியிலிருக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அங்கிருக்கும் அரசியல் தலைவர்களை உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமற்ற வகையிலும் சந்தித்து வந்தாலும் பிரதமரைச் சந்திப்பதற்கு இன்னமும் அவர்கள் அனுமதியெடுக்கவில்லையென்றார் அவர்.

நன்றி :- லங்கா ஈவொட்ஜ்.கொம்

No comments: